நாட்டில் கொரோனா வைரஸ்  2021 பிப்ரவரி மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என அரசால் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகளின் தேசிய சூப்பர் மாடல் குழு தெரிவித்துள்ளது. இக்குழு வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த நாட்டையும் நம்பிக்கை அடைய வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 180-க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இலகளவில் சுமார் 4.2 கோடி பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11.18 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 3.1 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை உலகளவில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, அர்ஜென்டினா உள்ளிட்ட  நாடுகளே மிக  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 83 லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் வைரஸ் தொட்டுக் ஆளாகியுள்ளனர். இதுவரை நாட்டில் 1 லட்சத்தி 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 66  லட்சத்து 63 ஆயிரத்து 508 பேர் இந்தியாவில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

ஒட்டுமொத்த உலகமும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரத்யேக தடுப்பூசியால் மட்டுமே அது சாத்தியம் என்பதால்  ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு மூன்று தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் உள்ளன. இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். அடுத்து வரும் இரண்டரை மாதங்கள் நாட்டிற்கு மிகவும் சவாலான காலமாக இருக்கும் என்றும், ஏனெனில் பண்டிகை மற்றும் குளிர்காலம் என்பதால் வைரஸ் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்திருந்தார். அதே நேரத்தில் அடுத்த ஆண்டின் முதற் காலாண்டு பகுதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறியிருந்தார்.  தற்போது மத்திய அமைச்சரின் இக்கருத்துக்கு  எதிர்மறையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய விஞ்ஞானிகள் சூப்பர் மாடல் குழு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கையூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் ஐஐடி ஹைதராபாத் மற்றும் ஐஐடி கான்பூர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற நிறுவனங்களின் நிபுணர்களிடம் இடம்பெற்றுள்ளனர். 

அவர் தெரிவிக்கையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே உச்சத்தை அடைந்து விட்டது, எனவே அடுத்தாண்டு அதாவது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா முடிவடையும் எனத் தெரிவித்துள்ளனர். அதற்கேற்றவாறு கொரோனாவால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாட்டில் படிப்படியாக குறைந்து வருகிறமு. கடந்த ஞாயிற்றுக்கிழமை  56 ஆயிரத்து 520 பேர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. ஆனால் அன்றைய தினத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 66 ஆயிரத்து 418 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அன்றைய தினம் சுமார்  581 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது மிகக்குறைந்த  பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 24-ஆம் தேதி 59 ஆயிரத்து 596 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல் அக்டோபர் 12 ஆம் தேதி 54 ஆயிரத்து 262 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களில் ஆறாவது முறையாக 60 ஆயிரத்துக்கும்  குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.