மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவுக்கு 7 மக்கவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் 1 மாநிலங்களவைத் தொகுதி ஒன்றும் கொடுப்பதாக அதிமுக- பாமக இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணி  படுதோல்வி அடைந்தது. அதிமுக மட்டும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் படு தோல்வி அடைந்தார்.

இந்த தேர்தல் முடிவுகள் அதிமுக- பாமக இடையே விரிசலை  ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பாமகவிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தமிழக அரசை கடிந்துகொள்ளும் அளவுக்கு இருக்கின்றன. முக்கியப் பிரச்சினைகளில் தமிழக அரசு அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்ற தொனியில் வருகின்றன.
ராமதாஸின் அறிக்கைகள். பாமக வட்டாரத்தில் இதற்கான காரணம் பற்றி விசாரிக்கும்போதுதான் வர இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் பாமகவுக்கான சீட் பற்றி டாக்டருக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதனால்தான் டாக்டரின் வாய்ஸ் மாறிக்கொண்டே இருப்பதாக கூறுகின்றனர்.

இது ஒருபக்கம் என்றால் அன்புமணி தனக்கு எம்.பி. பதவி வேண்டும் என்பதற்காக அமித் ஷா மூலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் டெல்லியில் இருந்து பிடிமானமான பதில் எதுவும் வரவில்லையாம். இங்கே எடப்பாடியிடம்  பேசிய வகையிலும் பாமகவுக்கு திருப்தி இல்லை என்கிறார்கள்.

மூன்று ராஜ்ய சபா எம்.பி.க்கள் அதிமுகவுக்கு உறுதியான நிலையில் அதில் ஒன்றை பாஜக கேட்கும் என்று தெரிகிறது. மீதமுள்ள இரண்டுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தன் அண்ணனுக்காக அமைச்சர் சண்முகம், அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் என்று முதல்வரை நேரிலும் போனிலுமாக பலர் ராஜ்ய சபாவுக்காக படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் 3 ராஜ்ய சபா இடங்களில் ஒன்று பாஜகவுக்கு, இரண்டு அதிமுகவுக்கு என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் முதலமைச்சர். . இந்த முடிவு முறைப்படி பாமகவுக்கு இன்னும் தெரியப்படுத்தப் படவில்லை என்றாலும் அதிமுகவுக்குள் நடக்கும் இந்த நகர்வுகள் தைலாபுரம் தோட்டத்துக்கு கசிந்திருக்கின்றன. இதனால் டாக்டர் ராமதசும், அன்புமணியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.