பீகார் சட்ட மன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. அதாவது வீடுவீடாக வாக்கு கேட்டு செல்பவர்கள் வெறும் ஐந்து பேருக்கு மிகாமல் செல்ல வேண்டுமெனவும் இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் நவம்பர்  29ம் தேதியுடன் முடிவடைகிறது,   நவம்பர் 29 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளார்.  டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- கொரோனா பெருந் தொற்று காரணமாக சர்வதேச அளவில் 17 நாடுகளில் தேர்தல்களை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவிக்கிறோம். 

நவம்பர் 29ம் தேதியுடன் தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிகிறது, பீகார் சட்டமன்றத்தில் 243 உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதில் 38 எஸ்சி வகுப்பினருக்கும் 2 இடங்கள் எஸ்டி வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 6.2 கோடியிலிருந்து 7.2 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் 7.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களாக உள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்டுப்பாடு மற்றும் கவனம் செலுத்தப்படவுள்ளது. நோய் தொற்று  காலம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க வாக்குபதிவு நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் என்ற நிலையில் இருந்து 1000 வாக்காளர்கள் என குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்தல் மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறும், அக்டோபர் 28ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 3- ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7- ஆம் தேதியும் நடைபெறும், அதேபோல் மொத்தம் ஏழு லட்சம் சனிடைசர்கள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 46 லட்சம் முகக் கவசங்களும், 23 லட்சம் கையுறைகளும் பயன்படுத்தப்பட உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கலாம். 

அதேபோல் இந்த முறை ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றை பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் ஆன்லைன் மூலமாகவே தங்களுக்கான சான்றுகளை பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல் ஆணையர்  சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.