பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதை வேண்டுமானாலும் பேசட்டும் அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதை வேண்டுமானாலும் பேசட்டும் அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். எங்களது பாதை உங்களுடைய பயணம் மக்களை நோக்கிச் செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக இடையேயான விமர்சனம் அதிகரித்துள்ளது. அதிலும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொருவரும் அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை குறிவைத்து விமர்சனங்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. அதேபோல் இந்து சமய அறநிலைத்துறை இந்துக் கோவில்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு கோவில்களில் ஆதிக்கம் செய்து வருகிறது. கோவில் விஷயங்களில் அனாயிசமாக தலையிடுகிறது. மொத்தத்தில் இந்து சமய அறநிலையத் துறையை தேவையில்லாத ஒரு துறை என பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்,

இந்நிலையில் மதுரை ஆதீனமும் இதே குரலில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.இது இந்து சமய அறநிலையத் துறைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நேரங்களில் அமைச்சர் சேகர்பாபு அதற்கு எதிர்வினை ஆற்றும் நிலையில் அது சர்ச்சையாக மாறிவிடுகிறது இப்படி தமிழக அரசியல் களம் அண்ணாமலை vs அமைச்சர்கள் என மாறியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உப கோவிலான செல்லியம்மன் பெரியசாமி மலைக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு உடைக்கப்பட்ட சாமி சிலைகளை அவர் ஆய்வு செய்தார், இக்கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மலைக் கோவிலுக்கு செல்லும் பாதை விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

கோவிலை புணரமைக்க கார்த்திக் கோபிநாத் பணம் வசூல் செய்த விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என்றார். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்கவும் நிலுவையில் உள்ள வாடகை தொகைகளை வசூலிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து தங்களை விமர்சித்து வருகிறாரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அண்ணாமலையின் எது வேண்டுமானாலும் பேசட்டும் அவரின் விமர்சனத்திற்கு கவலைப்படாமல் எங்களது பாதை, எங்களது பயணம் மக்களை நோக்கி செல்கிறது என்றார்.