உலமாக்களுக்கு ஓய்வு ஊதிய உயர்வு, வக்பு வாரியத்திற்கு நிதி உயர்வு, ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு சலுகை என, இதுவரை எந்த முதல்வரும் இஸ்லாமிய சமூகத்திற்கு செய்திடாத பல நல திட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் பாராட்டியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு ஏராள திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

வாணியம்பாடி நகரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்இன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கலந்துகொண்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:  தொழிலாளர் நல வாரியத்தில் 60 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, கட்டுமான தொழிலாளர்களுக்கு பணி இடத்தில் விபத்து மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் வழங்கப்படுகிறது. இயற்கை மரணம் ஏற்பட்டால் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஈமச்சடங்கிற்கு 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனவே தொழிலாளர்கள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

 

தமிழக அரசு எப்போதும் இஸ்லாமியர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக மகத்தான திட்டங்களை அறிவித்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதை நிறைவேற்றி வருகிறார். புனித பயணம் செல்லும் ஹஜ் மானியமாக 6 கோடி வழங்கப்பட்டுள்ளது, தமிழகத்திலிருந்து  ஹஜ் செல்லும் ஹாஜிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களின் பயண தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னரே சென்னைக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. இவர்கள் அனைவரும் தங்குவதற்கு ஒரே விடுதியில் மட்டுமே இருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு தங்குவதற்கு விடுதிகள் கட்டுவதற்கு 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். உலமாக்களுக்கு ஓய்வூதியம் 1500 என்பதை 3 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு இதுவரை 60 லட்சமாக இருந்த பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றின் பராமரிப்பு தொகை 5 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார். 

அரசியல் தலையீடுகளைத் தாண்டி 100 கோடி மதிப்பீட்டில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை முதலமைச்சர் மீட்டு கொடுத்துள்ளார். இதுவரை எந்த முதலமைச்சரும் அறிவித்திராக வகையில் இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமுதாய மக்கள் பயன்பெறும் வகையிலும் நல்ல திட்டங்களை நல்ல அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி போல இதுவரை எந்த முதலமைச்சரும் இவ்வாறு அறிவித்ததில்லை. எனவே இஸ்லாமிய  சமூகத்தின் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை பொய் பிரச்சாரம் செய்து ஏமாற்றி வருகின்றனர். அதையெல்லாம் நம்பாமல் எப்பொழுதும் அம்மாவின் அரசுக்கு இஸ்லாமிய மக்கள் பேராதரவு தர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.