Asianet News Tamil

இனியும் பிரதமரை நம்பி பிரயோஜனம் இல்லை... லைட்டடிக்கச் சொன்னதால் திருமாவளவன் வேதனை..!

இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்காக நாம் வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். 

No longer worthy of trusting the Prime Minister Sad Thirumavalavan
Author
Tamil Nadu, First Published Apr 4, 2020, 2:25 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்காக நாம் வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நாடு முழுவதுமான முழு அடைப்பு பத்து நாட்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பிரதமர் ஏதோ அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்றதும் முக்கியமான செய்திகள் அதில் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்தனர். ஆனால், ஏப்ரல் 5, ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு 'டார்ச் லைட்டை' அடியுங்கள் என்று பிரதமர் அறிவிப்பு செய்துள்ளார்.

இந்த அறிவிப்பால் கரோனா தொற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா? 21 நாள் அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும். பிரதமரின் வீடியோ அறிவிப்பு வெளியாகப் போகிறது என்றவுடன் நேற்று காணொலிக் காட்சியின் மூலமாக ஒவ்வொரு மாநில முதல்வரும் தமது மாநிலத்துக்குத் தேவையான உதவிகளை பிரதமரிடம் கேட்டார்கள். 

அது தொடர்பாக அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்னொருபுறம் நிதி அமைச்சரும் ரிசர்வ் வங்கி ஆளுநரும் செய்த நிவாரண அறிவிப்புகள் எதுவும் மக்களை எட்டவில்லை. குறிப்பாக, வங்கிக் கடன் தவணை மூன்று மாதங்களுக்குத் தள்ளிவைப்பு என்பது ஒரு ஏமாற்று அறிவிப்பாக முடிந்துவிட்டது. அது தொடர்பாக ஏதாவது விளக்கம் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போதும் நாடெங்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர்.

அது தொடர்பாக ஏதேனும் அறிவிப்பை செய்வார் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்புக் கருவிகள் இல்லை; சோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தத் தேவையான உபகரணங்கள் இல்லை. அதைப்பற்றி ஏதேனும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவை எதைப் பற்றியும் பேசாமல் ஒன்பது மணிக்கு 9 நிமிடங்கள் "மின் விளக்கை அணையுங்கள், டார்ச் அடியுங்கள்" என்று அறிவித்திருப்பது பிரதமர் இந்த நாட்டில்தான் இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் மாய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறாரா என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

பிரதமர் மட்டுமல்ல அவரது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் மூத்த அமைச்சர்கள் கூட மக்களைக் கேலி செய்யும் விதமாகவே அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். ஒரு அமைச்சர் தொலைக்காட்சியிலே ராமாயணத் தொடரை தான் பார்த்து மகிழும் காட்சியைப் பகிர்கிறார். உள்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. போலி அறிவிப்புகளைச் செய்துவிட்டு நிதியமைச்சர் காணாமல் போய்விட்டார். அமைச்சர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல அதிகாரிகளும் பொறுப்பின்றி நடந்துகொள்வதைப் பார்க்கிறோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது எப்படி மக்களை முட்டாளாக்கும் அறிவிப்புகளை வெளியிட்டாரோ அதைப் போன்ற அறிவிப்புகளை மீண்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர். இந்த நிலையில், பிரதமர் இந்த முறையாவது உருப்படியாக ஏதேனும் அறிவிப்புகளைச் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. மருத்துவர்களையும், மக்களுக்காகப் பணியாற்றும் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக கை தட்டுங்கள் என்று முன்பு சொன்னார்.

அதில் கூட ஏதோ ஒரு தர்க்கம் இருந்தது. இப்போது பிரதமர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் எந்தவித தர்க்கமோ, பொருளோ இருப்பதாகத் தெரியவில்லை. மீண்டும் இது கேலிக்கூத்தாக உள்ளது. கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி 'குரங்காட்டம்' நடத்துகிறார். மக்கள் மீதான அக்கறையோ, பிரதமர் என்ற பொறுப்போ அதில் வெளிப்படவில்லை. மக்களைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாத, நாட்டைப் பற்றி கவலையே படாத ஒருவரின் அறிவிப்பாகத்தான் இது இருக்கிறது. 

மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொண்டால் தான் உண்டு. மத்திய அரசாங்கம் உங்களுக்காக எதையும் செய்யாது என்பதைத்தான் பிரதமரின் அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது. இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்காக நாம் வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்; நாட்டையும் பாதுகாப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios