முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் எதுவும் வழங்கவில்லை என்று மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு ஆகியோரும் கடிதம் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

ஜெ. மறைவுக்குப் பிறகு அதிமுக டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அணிகளாக பிரிந்தன.  தமிழகத்துக்கும், அதிமுக கட்சிக்கும் இரண்டு முதலமைச்சர்களை அடையாளம் காட்டியவர் சசிகலாதான் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கூறி வந்தார்.

மனித நேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் நேற்று இணைந்தன. இந்த அணிகள் இணைப்புக்குப் பிறகு, துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். அணிகள் இணைப்பின்போது, பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலா நீக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

டிடிவி தினகரன் ஆதரவாளர் 19 எம்எல்ஏக்கள் இன்று ஆளுநரை சந்தித்தனர். அப்போது முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த கடிதமும் வழங்கப்படவில்லை என்று கூறினார். மேலும், கருணாஸ், தனியரசு இருவரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் எதுவும் வழங்கவில்லை என்று தன்னிடம் கூறியதாக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கூறினார்.