அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும் ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

 

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக களம் காண உள்ளது. இதையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

எனினும் கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் கமல் தனித்து தேர்தலை சந்திக்காமல், மதச்சார்பற்ற கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “ நாடு முழுவதும் மதவாதம் அதிகரித்துள்ள, இந்த சூழலில், மதசார்பற்ற கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் எங்களுடன் இணைய வேண்டும். ஒருவேளை கமல் தனித்து தேர்தலை சந்திப்பது அவர் பேசும் மதச்சார்பற்ற கொள்கையை சிதைத்து விடும். இதனால் பாஜகவுக்கோ அதிமுகவிற்கோ மறைமுகமாக பயனளிக்கும். கமலும் அதனை விரும்பமாட்டார் என்பது எனக்கு உறுதியாக தெரியும். ஆகவே, எங்களோடு இணைந்து கமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்.