தற்போது மக்களவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மக்களவைத்  தேர்தலில் வென்ற, எம்.பி.,க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி  கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
அப்போது பாஜக மற்றும் சிவசேனா எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே' என, தொடர்ந்து கோஷமிட்டனர். தங்களை கிண்டல் செய்யும் வகையில், ஆளும் கட்சியினர், இவ்வாறு முழக்கமிட்டதாக  எதிர்க்கட்சிகள் புகார் கூறின. 

இது குறித்து சபாநாயகராக புதிதாக பதவியேற்றுக் கொண்ட பாஜகவைச் சேர்ந்த, ஓம் பிர்லா, நாடாளுமன்றம்  என்பது கோஷங்கள் எழுப்புவதற்கும், பதாகைகளை காட்டுவதற்கும், மையப் பகுதிக்கு வந்து கூச்சல் போடுவதற்கு மான இடம் இல்லை என கோபத்துடன் கூறினார்.

தங்களுடைய தொகுதி மற்றும் மக்களின் பிரச்னைகள் குறித்தும், பொதுப் பிரச்னைகள் குறித்தும், சபையில் உறுப்பினர்கள் பேசலாம். அதற்கான விதிகள் உள்ளன; அதன்படியே நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான, நம்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தல் முறையை, உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. நாடாளுமன்றத்தின்  மாண்பு, மரபு, கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

நம்பிக்கை பொறுப்புடன் செயல்பட்டு, நாடாளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என, உலக நாடுகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் ஓம் பிர்லா தெரிவித்தார்.