திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உறுபுக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என வெளியான தகவல் பொய்யானது என  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் காவேரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது, சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்புக்காக பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். காவேரி மருத்துவமனையை விட்டு தொண்டர்கள் வெளியேற வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.

கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிவிட்டனர். அங்கிருந்த கருப்பு பூனைப் படையினரும் காவேரியில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தப் பல்கலைக்கழக வெப் சைட்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த தகவல் பொய்யானது என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார். அண்ணா பலகலைக்கழக கல்லூரிகள் வழக்கம் போல் செய்லபடும் என தெரிவித்தார்.