நீங்க இந்து இல்லையா ? அப்ப உங்களுக்கு இங்கு வேலை இல்லை ! ஆந்திர தலைமைச் செயலாளர் அதிரடி அறிவிப்பு !!
திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் இந்து அல்லாதோர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என ஆந்திர தலைமைச் செயலர் எல்.வி.சுப்ரமணியம் அறிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரேசத்தின் திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மதம் தொடர்பான சர்ச்சை கடந்த ஆண்டு வெடித்தது. அதன்பின்னர் தற்போது மீண்டும் அதே சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆந்திர தலைமைச் செயலர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாதோர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தான தலைமை செயலர் அனில் குமாருடன் நடந்து ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கு பணிபுரிவோர் தங்கள் மத்தை மாற்றிக்கொண்டால் அதில் எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் தங்கள் மதத்தை மாற்றுவது அவர்களின் சுதந்திரம். அதற்கும் எந்த எதிர்ப்பும் இல்லை. இருந்தாலும், அவர்கள் தங்கள் பணியை தொடர முடியாது.
அத்துடன் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படாது. ஏனென்றால், அது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும். அவர்கள் தங்கள் மதத்தை நம்பட்டும். ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வெளியேற வேண்டும். தேவைப்பட்டால் நாங்கள் திருப்பதியில் பணிபுரிவோரின் வீட்டிற்கு திடீரென சென்று ஆய்வும் செய்வோம்' என தெரிவித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் பேருந்து டிக்கெட்டின் பின்னால் ஜெருசலேம், ஹஜ் யாத்திரை பற்றிய விளம்பரங்கள் இடம்பெற்ற விவகாரம் அங்கு சர்ச்சை ஏற்படுத்தியது. அத்துடன் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் திருப்பதி கோயில் பணியாளர்களின் மதம் தொடர்பான சர்ச்சை கிளம்பியுள்ளது.