2021 சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் வரும் நவம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கான காப்பு கட்டும் நிகழ்வு சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சி நிர்வாகிகளுக்கு காப்பு கட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன், தெய்வமாக வழிபடும் பெண்களை கொச்சைப்படுத்திய திருமாவளவன், அவருக்கு துணை போகும் ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றார்.அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்றும், மீறி சென்றால் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். 

பட்டியலின மக்கள், பெண்களை கேவலப்படுத்துவோரை கண்டிக்காமல் இருப்பது தான் திமுகவின் சமூக நீதி என்றும், சமூக நீதியைப் பற்றிப் பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் தவறிழைத்தவர்களை ஸ்டாலின் பாதுகாப்பதாகவும், ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு தகர்ந்துவிட்டதாகவும் பாஜக மாநில தலைவர் முருகன் பேசினார்.டெல்லியில் தினந்தோறும் நடைபெற்று வரும் 2G வழக்கு விசாரணை குறித்த செய்திகள் வெளியில் வரக்கூடாது என்பதற்காகத்தான் மக்களை திசைதிருப்பும் வேலையை திமுக செய்து வருவதாகப் பேசிய முருகன், வெற்றிவேல் யாத்திரையின் இறுதி நாளான டிசம்பர் 6-ல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று யாத்திரையை முடித்துவைப்பதாகவும் கூறினார். 

பாஜகவினரை சட்டமன்றத்துக்குள் அனுப்பும் வேலையைத் தான் தாம் செய்துவருவதாகப் பேசிய முருகன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் உறுதி செய்யப்படாத தகவல்கள் உலா வருவது குறிப்பிட தக்கது.