தமிழக சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் க்ளைமேக்ஸ்க்கு முன்  பின் வாங்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ’’சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவது இல்லை. அன்றைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்திருந்தோம். இன்றைக்கு சூழல் மாறி இருப்பதால் வலியுறுத்தவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிமுக அரசு முக்கியத்துவம் தரவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தின் மூலம் சென்னைக்கு எப்போது குடிநீர் கிடைக்கும்’’ என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட 3 அதிமுக எம்.எல்.ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என சபாநாயகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதேபோல் குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.

 இதையடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் கொடுத்தது. இத்தீர்மானம் ஜூலை 1-ல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என கூறப்பட்டது. அதேநேரத்தில் சபாநாயகருக்கு எதிரான முந்தைய திமுகவின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அப்போது சட்டசபையில் பெரும் களேபரமே ஏற்பட்டது. இம்முறையும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடையவே வாய்ப்பிருக்கிறது. தற்போதைய நிலையில் அத்தகைய தோல்வியை திமுக தலைமை விரும்பவில்லை. ஆகவேதான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.