no confidence motion against union government
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்குதேசம், கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஆந்திராவின் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்றே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி நடந்தபோது, மக்களவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என மக்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

அதே முயற்சியை தெலுங்குதேசம் கட்சியும் முன்னெடுத்துள்ளது. 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைக்கும்போது பாஜகவிற்கு 282 எம்பிக்கள் இருந்தனர். கடந்த காலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் தோல்வியுற்றதால், பாஜகவிற்கு தற்போது 274 எம்பிக்கள் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், பெரும்பான்மையை பாஜக நிரூபித்து விடும் என்றாலும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் பாஜக அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என்றபோதிலும், பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எம்பிக்கள் பாஜகவில் உள்ளனர். மேலும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் பாஜகவிற்கு ஆதரவாகவே வாக்களிப்பர்.

எனினும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம், கூட்டணியிலிருந்து வெளியேறி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது, பாஜகவிற்கு பின்னடைவாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
