அதிமுகவில் தற்போது நடப்பது அக்கட்சியின் உட்கட்சிப் பூசல் என்றும், அதனால் எதிர்கட்சிகள் கோரியபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட முடியாது எனவும்  ஆளுநர் வித்யாசாகர் திடடவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்த நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர்  பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  கடிதம் கொடுத்துள்ளனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கனிமொழி, விஜய தாரிணி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.இந்நிலையில் ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் வித்யாசாகர் ராவை  சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சிப் பூசல்தான் உள்ளது என்றும், அந்த கட்சிப் பிரச்சனையில் தன்னால் தலையிட முடியாது என்றும் ஆளுநர் அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

மேலும் 19 எம்ல்ஏக்கள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறவில்லை என்றும், ஆட்சிக்கு எதிராக உள்ள அந்த எம்எல்ஏக்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கவில்லை என்பதால் அது உட்கட்சிப் பூசல்தான் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உத்தரவிட முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.