எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ அதேபோன்று ஆரோக்கியமான முறையில் இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்று கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஊரெங்கும் ஒரே பேச்சு; 2021ல் அம்மாவின் ஆட்சி' ரைமிங்காக பதில் அளித்தார்.  

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். மேலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தூய்மை பணியாளர்களுக்கு சால்வை போர்த்தி நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:-  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை ஐந்தரை லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார், 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற அமைச்சர், சென்னையில் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். 

தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், குறைந்த அளவு போக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்வதாக புகார்கள் வருகிறது. எனவே படிப்படியாக பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்படும் எனக் கூறினார். இன்று பிரதமருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார். மேலும் மருத்துவகுழு உள்ளிட்ட குழுக்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் காரணமாக தற்போது ஊரடங்கை நீட்டிக்கும் நிலை இல்லை என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் மனநிலையை புரிந்து கொண்டுள்ள முதலமைச்சர் உரிய விளக்கத்தை நேற்றைய தினம் அளித்துள்ளார். எனவே தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் இதனால் பாதகம் இல்லை என்றும், முதல்வர் என்றைக்கும் விவசாயிகளுக்கு ஆதரவானவர். எல்லா விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என விளக்கமாக கூறும் வகையில் அரசு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்டகளமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார் என்றும், வெரும் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதாவை வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இது மக்களிடத்தில் எடுபடாது என்று கூறிய அமைச்சர், 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ அதேபோன்று ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்நிலையில் அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது என்றும் திட்டவட்டமாக கூறிய அமைச்சர், 'ஊரெங்கும் ஒரே பேச்சு, 2021ல் அம்மாவின் ஆட்சி தான் என அமைச்சர் ரைமிங்காக பதில் அளித்தார். அதேபோல் இரண்டாம் தலைநகர் உருவாக்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரும் தன்னுடைய கருத்தை விளக்கமாக கொடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.