பெரியார் சிலையை உடைப்போம் என சமூக வலை தளத்தில் பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார். ராஜாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் தமிழகம் முழுவதும் எச்.ராஜாவைக் கண்டித்து இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழகம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நிலையில் வி‌ஷவிதைகளை தூவி அதன் மூலம் ஆதாயம் தேடுகின்ற செயலை அம்மாவின் அரசு அனுமதிக்காது என்றார்.

அது ராஜாவாக இருந்தாலும் சரி, ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சரி நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

ஆனால் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பீர்களா ? என நிருபர்கள் கேட்டதற்கு சில விநாடிகள் திணறிய ஜெயகுமார், எச்.ராஜா தனது டுவிட்டர் கருத்தை வாபஸ் வாங்கி விட்டார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி அங்கிருந்து நழுவ முயன்றார்.

என்றாலும் செய்தியாளர்கள் விடாமல் இந்த கேள்வியை அமைச்சர் ஜெயகுமாரிடம்  கேட்கவே, . இது தொடர்பாக நாம் இப்போது வழக்கு தொடுத்தாலும் கூட வாபஸ் வாங்கி விட்டோம் என்று சொல்வார்கள். வாபஸ் வாங்கவில்லை என்றால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.