எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைதகள், இடது சாரிகள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த கூட்டணிக்குள் பாமகவைக் கொண்டு வர வேண்டும் என்று திமுகவில் உள்ள துரை முருகன் மற்றும்  எம்ஆர்கே பன்னீர் செல்வம்  போன்றோர் முயற்சி  செய்து வருகின்றனர். ஆனால் பாமக கூட்டணிக்குள் வந்தால் விடுதலைச் சிறத்தைகள் வெளியேறும் நிலைமை ஏற்படும்.

இந்நிலையில் திமுக கூட்டணிக்குள் பாமக இடம் பெறுமா ? என்று செய்தியாளர்கள் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையிலோ, பாஜக தலைமையிலோ கூட்டணி இன்னும் அமையவில்லை. டிடிவி தினகரன் தலைமையிலும் இன்னும் அமையவில்லை. கமல்ஹாசன் தலைமையில் அணி அமையும் என்கிறார்கள். அதுவும் இன்னும் நடக்கவில்லை.
 
திமுக தலைமையில் தான் இதுவரை வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. அதனால், எங்கள் கூட்டணி எளிதில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இத்தகைய வாதத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் கனவு  பலிக்காது என தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை காண்போம். என்னுடைய சொந்த தொகுதி சிதம்பரம். அங்கு நான் போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்,.