கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக கட்சிக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கினர். இதில் பாமக போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

குறிப்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் படுதோல்வி அடைந்தார். இது பாமக மட்டுமல்லாமல் ராமதாஸ் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கழகங்களுடன் இனி கூட்டணி இல்லை என தெத்தாக அறிவித்து தனித்து பாமக போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலிலும் பாமக படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வரை அ.தி.மு.க.வோடு கூட்டணியை வைத்துக்கொண்டு, அதன் பிறகு திராவிட இயக்கங்களுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என்ற மனநிலைக்கு பாமக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சியை பலப்படுத்த  பாமக முடிவெடுத்துள்ளது. இதற்காக சகோதரர்கள் படை, சகோதரிகள் படை என்று புதிய அணிகளை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ஈடுபட்டுள்ளார்.

இந்த குழுக்கள் ஒவ்வொன்றிலும் தலா 2500 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், இந்த குழுவில் இருக்கும் ஒருவர்  50 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்க பாமக முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.


 
இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் வீதம் சேர்த்து, கட்சியை வலிமை படுத்திவிட்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற பாமக தரப்பில் தீவிர முயற்சியில் இறங்கி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.