எடப்பாடியார் தமிழர்; அவர் ஆட்சி நன்றாக இல்லை என்றால் நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம். அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சீமான் கூறியுள்ளார். 

கடந்த 2010-ம் ஆண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே நடைபெற்ற போராட்டத்தில் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்கினால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம் என்று பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு இன்று பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தேர்தல் பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசினால் அதிமுகவின் இரட்டை இலைக்குதான் ஓட்டு போடுவார்கள். ரஜினியும், கமலும் எம்ஜிஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்குத்தான். சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். முல்லை பெரியாறு அணையை தாரை வார்த்தது எம்ஜிஆர் தான். பிரபாகரன் மீது பற்று கொண்டதால் 100% எம்.ஜி.ஆரை மதிக்கிறோம். மற்றபடி என்ன நல்லாட்சி தந்தார் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் சீமான், அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி போராட வேண்டுமே தவிர திரைத்துறையில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் செல்வாக்கை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்துவிடும் என்கிற எண்ணம் மாற வேண்டும். நல்லகண்ணு தவிர இங்கு யாரும் நல்ல அரசியல்வாதி அல்ல. எடப்பாடியார் தமிழர்; அவர் ஆட்சி நன்றாக இல்லை என்றால் நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம். அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சீமான் கூறினார்.