22 தொகுதி இடைத் தேர்தல்களில் பெரும்பான்மையை இழந்துவிட்டால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கை  எடுத்து வருகிறார். 

இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபாலை, அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று, திடீரென சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து, தினகரன் ஆதரவு நிலைப்பாடு குறித்து 3 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்,கட்சி விதிகளை மீறி 3 பேரும் செயல்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கொறடா ராஜேந்திரன், 3 எம்எல்ஏக்களும் விளக்கம் தரும் பட்சத்தில், எந்தவகையான முடிவையும் எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு என்றார்.

மேலும், 3 எம்எல்ஏக்களும் டிடிவி தினகரனுடன் எப்போது சேர்ந்தார்களோ அப்போது இருந்தே எங்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்றும் கூறிய அதிமுக கொறடா ராஜேந்திரன், ஆட்சிக்கு எதிராக தமிமுன் அன்சாரி, கருணாஸ் செயல்பட்டார்கள் என கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும், ஆதாரங்கள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்