நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் நேற்று இரவு ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கடுமையான மழை பெய்த நிலையில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு அதி தீவிர புயலாக வலுபெற்று. புதுச்சேரி மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புயலானது கரையை  கடந்தது.  புயலின் மையப்பகுதி 25 சதவீதத்துக்கு மேல் கரையை கடந்த நிலையில் அதிகாலை 3:10 மணி அளவில் அது மிகவும் தாமதமாகவே நகர்ந்தது. இந்த புயல் முழுக்க கடக்க மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் கூட ஆகலாம் என வானிலை ஆய்வு மையம் அப்போது தெரிவித்தது.

தாமதத்தினால் புயல் வலுவிழக்காது எனவும், தாமதத்திற்கு காரணம் புயல் கரையை கடக்கும் திசைக்கு எதிர் திசையில் காற்று வீசியதால் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் தீவிர புயலாகவே நிவர் புயல் கரையை கடந்துள்ளது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இதில் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 

அதேபோல் அரசு சரியான நேரத்தில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரிய அளவில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இந்நிலையில் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கனவே நிலம் புயல், கஜா புயல், நாடா புயல், தானே புயல் என ஏராளமான மரங்களை இழந்த சென்னை. தற்போது நிவர் புயலில் நூற்றுக்கணக்கான மரங்களை  இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.