வங்காள விரிகுடா பகுதியில் உருவான நிவர் புயல் காரணமாக, வட மாவட்டங்களில் புயலின் தாக்கத்தால் பெரும் மழை  பெய்து வருவதால், (நவம்பர் 26 ஆம் தேதி) இன்று அறிவிக்கப்பட்ட பொது வேலை நிறுத்தத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: வங்காள விரிகுடா பகுதியில் உருவான நிவர் புயல் திசை மாறி வேகம் குறைந்து அதி தீவிர புயலாக மாறி உள்ளது, இதனால் பொது வேலை நிறுத்த நாளான 26ம் தேதி தமிழகத்தில் வட மாவட்டங்களில் புயலின் தாக்கமும் பெருமழையும் நீடிப்பதால் 13 மாவட்ட மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, ஆகவே நமது செயல்திட்டத்தில் சிறிது மாறுதல் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. 

புயலின் தாக்கத்தை விட இந்திய அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் மீது தொடுக்கும் தாக்குதல் பல மடங்கு அதிகமானது, கொடூரமானது, பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் வேலைநிறுத்தம் சாத்தியமில்லை, ஆனால் இதர மாவட்டங்களில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணியில் மற்றும் அத்தியாவசிய பணியில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு செல்லலாம், அதேபோல வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிக்கு செல்ல வேண்டிய மின்வாரியம் போன்ற துறைகளில் தொழிலாளர்களும் பணிக்கு செல்லலாம். நமது போராட்டம் மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிரானதே தவிர மக்களுக்கு எதிரானது அல்ல. 

பாதிப்புக்கு ஆளாகியுள்ள மேற்சொன்ன சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தமிழக மக்கள் நிவாரண பணிகளில் தொழிற்சங்க அமைப்புகளும் தொழிலாளர்களும் ஈடுபட வேண்டி இருப்பதால் இந்த நேரத்தில் மறியல் போராட்டம் நடத்துவது பொருத்தமற்றது. எனவே அதை கைவிடலாம், புயல் பாதிப்புக்கு ஆட்படாத பகுதிகளில் அங்கு மழை பெய்து கொண்டிருந்தாலும் கூட மறியல் போராட்டத்தை நடத்துவது சரியானதாகும். இதில் மாற்றம் தேவைப்படும் எனில் அந்த மாவட்ட தலைவர்களே கலந்து பேசி போராட்ட வடிவத்தை நிர்ணயிக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.