நிவர் புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நாளை  கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. ஆகையால், புயரை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- நிவர் புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது பற்றி நிலைமைக்கு ஏற்றவாறு அரசு முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். 

புயல் கரையை கடக்கும் வெளியாகும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும்.  ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும் , போதிய மணல் மூட்டைகளை வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மக்களுக்காக அரசு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள் என்றார்.