விஜய் மல்லையா,  நீரவ் மோடி என வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கட்டாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நித அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் பெற்று வேண்டுமென்றே அதை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை, 2014 - 15ல் 5,349 ஆக இருந்தது. இது 2019 மார்ச்சில் 8,582 ஆக உயர்ந்துள்ளது. இது 60 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்தார்.

 மற்றொரு  கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில் , கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத 12 ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானம் தொடர்பாக 380 வழக்குகளில் வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. 

இதில் 68 வழக்குகளில் சட்ட நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 983 குழுமங்களில் நடந்த சோதனையின் போது கணக்கில் காட்டாத 1584 கோடி ரூபாய் பறி முதல் செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீத்தாராமன்  தெரிவித்தார்.