Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா சீதாராமனுக்கு ராணுவம்; பியூஸ் கோயலுக்கு ரெயில்வே துறை… 9 புதுமுகங்களுக்கு இணை அமைச்சர்  பதவி

nirmala seetharaman defence minister
nirmala seetharaman defence minister
Author
First Published Sep 3, 2017, 10:24 PM IST


2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரதமர் மோடி நேற்று மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்தார். இதல் நாட்டிலேயே முதல்முறையாக ராணுவத்துறை முழுப் பொறுப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன்  நியமிக்கப்பட்டார்.

மேலும், இணை அமைச்சர்களாக இருந்த பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோருக்கு கேபினெட் அந்தஸ்து  தரப்பட்டுள்ளது. மேலும், 4 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 9 புது முகங்களுக்கு இணை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

76 அமைச்சர்கள்

இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை 73ல் இருந்து 76 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக 81 அமைச்சர்கள் வரை இடம்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்தபின்,  பிரதமர் மோடி அமைச்சரவையில் செய்யும் 3-வது மாற்றமாகும்.

கூடுதல் பொறுப்புகள்

 பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா முதல்வராக பொறுப்பேற்றார். மேலும், சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்த அணில் தாவே மரணம் , நகர்புறமேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றது, ரெயில்வே அமைச்சர் பதவியை சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தது ஆகியவற்றால் முக்கிய துறைகள் கூடுதலாக மூத்த அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நிர்வாகச் சீர்திருத்தம்

  மேலும், பல அமைச்சர்களின் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லாததால் அவர்களை கட்சிப் பணிக்கு மாற்றவும் பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

ராஜினாமா

இதையடுத்து, ராஜீவ் பிரதாப் ரூடி, கல்ராஜ் மிஸ்ரா, பண்டாரு தத்தாத்ரேயா, சஞ்சீவ் குமார் பல்யான், பாகன்சிங் குலாஸ்தே, மகேந்திர சிங் பாண்டே ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இதன்படி, சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களுக்கு பதவி உயர்வும், சிலருக்கு இலாகா மாற்றமும், புதியவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.

ரெயில்வே துறை

ரெயில்வேதுறையில் அடிக்கடி விபத்துக்கள் நேர்ந்ததால் ஏற்பட்டதால் அந்த பொறுப்பை சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து,  பியூஸ் கோயலிடம் ரெயில்வே துறையும், நிலக்கரித்துறையும் ஒப்படைக்கப்பட்டு, கேபினெட் அந்தஸ்து தரப்பட்டது.

உமாபாரதி மாற்றம்

மத்திய நீர்வளத்துறை, கங்கை புதுப்பித்தல் துறையின் அமைச்சராக இருந்த உமாபாரதி சிறப்பாகச் செயல்படவில்லை. இதையடுத்து, அந்த துறைகள் சாலை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக உமாபாரதிக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அளிக்கப்பட்டது.

முதல் பெண் அமைச்சர்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை தனிப்பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின் பாதுகாப்பு துறை பொறுப்பு வகிக்கும் முதல் பெண் நிர்மலா ஆவார்.

தர்மேந்திர  பிரதான்

பெட்ரோலியம் மற்றும்  இயற்கை எரிவாயுத்துறைஅமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கூடுதலாக திறன்மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டது. முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மைத்துறை அமைச்சராக கேபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அல்போன்ஸ் கண்ணன்தனத்துக்கு சுற்றுலாத்துறையும், ஹர்தீப் பூரியிடம் வீட்டுவசதி மற்றும் நகர்புறமேம்பாட்டுதுறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உள்துறை செயலாளரான ஆர்.கே.சிங்கிடம் மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் மனித வளமேம்பாட்டு துறை, நீர்வளம், மற்றும் கங்கை சுத்திகரிப்பு இணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர்கள்

நிதித்துறை இணைஅமைச்சராக இருந்த அர்ஜீன் சிங் மேக்காலிடம் இருந்து அந்த பொறுப்பு மாற்றப்பட்டு, புதிய முகம் சிவ் பிரதாப் சுக்லாவிடம் அளிக்கப்பட்டது. மேக்வாலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அளிக்கப்பட்டது.  அஸ்வினி குமார் சவுபே, சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக வீரேந்திர குமாரும் நியமிக்கப்பட்டனர்.

திறன்மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக ஆனந்தகுமார் ஹெக்டேவும், வேளாண்துறை இணைஅமைச்சராக கஜேந்திர சிங்கும் நியமிக்கப்பட்டனர்.

பொன் ராதாகிருஷ்ணன்

இதில் இணை அமைச்சர்களாக இருந்த சந்தோஷ் குமார் கெங்வார், கிரிராஜ் சிங் ஆகியோருக்கு பதவி  உயர்வு தரப்பட்டு, முறையே தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் துறை ஒப்படைக்கப்பட்டது.

கப்பல் மற்றும் சாலைப்போக்குவரத்து துறை இணைஅமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணனிடம் கூடுதலாக, நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios