Nirmala devi enquiry by cbcid police in MKU
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசிரியர்கள் 2 பேரின் துண்டுதலினால்தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட அந்த 2 போராசிரியர்ளும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.
பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்தார்.
அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிர்மலா தேவி பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருவதாகவும், பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகவதாக போலீசார் தெரிவித்தனர்..
பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அவரை மதுரை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டள்ளது.

இதனிடையே பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலத்தின் அடிப்படையில், துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
