மக்களவையில் ரஃபேல் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்ணடித்து சிரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

மக்களவையில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மிகவும் காரசாரமாக பேசிவிட்டு, பின்னர் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். பின் தன் இருக்கைக்கு திரும்பியதும் அருகில் இருந்த எம்பியைப் பார்த்து கண்ணடித்தார். ராகுல் காந்தியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மீண்டும் மக்களவையில் ராகுல் கண்ணடித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

மக்களவையில் ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தில் பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசுவதைப் போன்று காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிப்பதாக விமர்சித்தார்.

அண்டை நாடுகளின் போட்டியை சமாளிக்க ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்ற அவர், விமானம் தொடர்பான காங்கிரசின் ஒப்பீடு தவறானது என்றார். இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மேக் இன் இந்தியா குறித்து பேசும் பாஜக அரசு, ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கி இருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

அதனை வரவேற்ற ராகுல்காந்தி, எக்ஸலன்ட், எக்ஸலன்ட் என்று மேஜையை தட்டி உற்சாகப்படுத்தினார். பின்னர், ராகுல் காந்தி கண்ணடித்து சிரித்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி கண்ணடிக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, ‘’ராகுல் மீண்டும் கண்ணடித்துள்ளார். இந்த முறை ரபேல் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது கண்ணடித்துள்ளார். எனவே, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை” என குறிப்பிட்டுள்ளார்.