பாஜக தமிழக தலைவர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் வெள்ளிக்கிழமை பா.ஜ.க தலைமை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழிசை தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்க உள்ள நிலையில் பாஜகவின் அடுத்த தமிழகத்தலைவர்கள் ரேஸில் பலருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க.,வின் அகில இந்திய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், இளைஞரணியின் தேசிய துணைத் தலைவருமான கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட உள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் பொறியியல் மற்றும் சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அத்வானியுடன் இருந்தவர். 1998 ஆம் ஆண்டு பாஜகவின் இளைஞரணி மண்டல தலைவராக முதன் முதலாக பொறுப்புக்கு வந்தவர். தற்போது இளைஞர் அணியின் அகில இந்திய துணைத் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

கோயம்புத்தூர் இளைஞரணி மண்டல பொறுப்பில் இருந்து துவங்கி மாவட்ட பொதுச்செயலாளர், மாநில பொதுச்செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இளைஞரணி செயலாளர் என இருபது வருடங்களில் ஏ.பி.முருகானந்தத்தின் அரசியல் பயணம் என்பது கீழிருந்து மேல் நோக்கியதாக இருந்தது. அதற்கடுத்து மோடியின் தீவிர ஆதரவாளராக மாறிப்போனார்.

கேரளம், மேற்குவங்கம், கர்நாடகம், மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொறுப்பாளராக பணியாற்றிய ஏ.பி.முருகானந்தம், கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வந்து இளைஞரணிக்கு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் இவரது உழைப்பு மிக முக்கியமானது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இம்மாநிலங்களில் கணிசமான இடத்தை கைப்பற்ற தலைமைக்கு இந்த அடித்தளம் உதவியாக இருந்தது.

ஏ.பி.முருகானந்தம் குறித்து அவரது கட்சி நண்பர்களிடம் கேட்ட போது, பா.ஜ.க சார்பில் அகில இந்திய அளவில் நடந்த பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதன் மூலம் வெவ்வேறு பிரச்சினைகளை கையாண்ட அனுபவம் உள்ளவர். தமிழக பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகளால் தமிழகத்துக்குள் பா.ஜ.க தொண்டர்கள் செய்துள்ள பல்வேறு பணிகள், மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு தெரியாமல் இருந்து வருகிறது.

ஏ.பி.முருகானந்தம் தலைவரானால் இந்த சூழ்நிலை மாற வாய்ப்புள்ளது. தொண்டர்களின் உழைப்பு மக்களுக்கு தெரிவதுடன் கட்சிக்குள் புதியவர்கள் பலர் இணைவார்கள். இதனால் தமிழகத்தில் பா.ஜ.க வின் அடையாளம் மாறுவதுடன், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதெல்லாம் நடந்தால் புதிய முகமாய் தாமரை மலரும் என்று நம்புவதாக அவரது கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். 

நாளை மறுநாள் ஏ.பி.முருகானந்தம் பாஜக தமிழக தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.