அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து தங்கதமிழ்ச்செல்வனை தொடர்ந்து பழனியப்பனும் விலகுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

துவக்கத்தில் இருந்தே டி.டி.வி. தினகரனுக்கு நம்பத்தகுந்த நபராக பழனியப்பன் செயல்பட்டு வந்தார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த போதே பழனியப்பனும் அக்கட்சிக்கு சென்றுவிடுவார் என்று பேச்சுகள் அடிபட்டன. ஆனால் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து டிடிவி தினகரன் மீதான தனது விஸ்வாசத்தை பழனியப்பன் நிரூபித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பழனியப்பன் அமமுகவில் அவ்வளவு ஆக்டிவாக இல்லை. 

இதற்கு காரணம் ஏற்கனவே தினகரனுடன் சென்று சுமார் 20 கோடி ரூபாய் வரை பழனியப்பன் கரைத்தது தான் என்கிறார்கள். கடைசியாக திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கும் கூட பழனியப்பன் கணிசமான தொகையை கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் எந்தவித எழுச்சியோ ஆர்பரிப்போ இல்லாதது பழனியப்பனை யோசிக்க வைத்துதாக கூறுகிறார்கள்.

இனியும் டிடிவிக்கு அரசியல் எதிர்காலம் அமமுகவில் இருப்பதாக கருதவில்லை என்கிற முடிவுக்கு வந்த பழனியப்பன் அதிமுகவில் மீண்டும் இணைந்துவிடலாமா என்று யோசிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அங்கு ஓபிஎஸ்சுக்கு அடுத்த நிலையில் கே.பி. முனுசாமி இருப்பதால் பழைய செல்வாக்கு கிடைக்குமா என்று அவருக்கு சந்தேகம் உள்ளது. அதே சமயம் திமுகவில் பழனியப்பனுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 

ஆனால் செந்தில் பாலாஜியை கடைசி நேரத்தில் விமர்சித்த காரணத்தினால் அவர் மூலமாக மீண்டும் திமுக தலைமையை தொடர்பு கொள்ள பழனியப்பன் தயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பழனியப்பனை திமுகவிற்கு அழைத்துச் செல்ல செந்தில் பாலாஜி தயாராகவே உள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் டிடிவி தினகரன் பழனியப்பனை பர்சனலாக தொடர்பு கொண்டு சிறிது நாட்கள் அமைதியாக இருக்கும் படி கேட்டதாக கூறுகிறார்கள். 

ஆனால் இனியும் தினகரனை நம்பி அமைதியாகஇருந்தால் நமது அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்று பழனியப்பன் தீவிர ஆலோசனையில் உள்ளார். இதே போல் கொலை வழக்கு ஒன்றில் பழனியப்பன் சிபிசிஐடி விசாரணையில் உள்ளார். அந்த வழக்கில் இருந்து சிக்கல் இல்லாமல் வெளியே வர திமுக அல்லது அதிமுகவின் ஆதரவு தேவை என்பதால் விரைவில் பழனியப்பன் சரியான முடிவை எடுப்பார் என்கிறார்கள்.