தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் சந்தோஷப்படும் வகையிலான தீர்ப்பே வர அதிகம் வாய்ப்பிருக்கிறது! என்கிற தகவல எடப்பாடி அண்ட்கோவின் வயிற்றில் புளியந்தோப்பையே கரைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தினகரன் சைடுக்கு எடப்பாடி அணியிலிருந்து புது எம்.எல்.ஏ.க்கள் சிலர் படையெடுப்பது தொடரத்தான் செய்கிறது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவை தொடர்ந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தினகரனை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என்று தகவல் கசிந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒரு எம்.எல்.ஏ. தினாவின் திசை நோக்கி நகர இருக்கிறார்! என்கிறார்கள்.அவர் கொல்லிமலை எம்.எல்.ஏ. சந்திரசேகர்தான்.

ஆளும் அணியில் தனக்கு எதிராக ஓவராக பேசும், செயல்படும் அமைச்சர்களுக்கு ஆப்படிப்பதில் ரொம்பவே குறியாக இருக்கிறார் தினகரன். அந்த அமைச்சர்களின் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.வை இழுப்பதன் மூலம் அவர்களுக்கு கடும் அதிர்சியை கொடுப்பதில் அதில் ஒரு டெக்னிக்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மாவட்டத்திலிருந்து பிரபுவை கழற்றிக் கொண்டு வந்தது போல், அடுத்து அமைச்சர் தங்கமணியை குறி வைத்திருக்கிறார் என்கிறார்கள். தங்கமணி ஜெயக்குமார், உதயகுமார் போல் ஓவராய் வாய் பேசுவதில்லை. ஆனால் சைலண்டாக தனக்கு ஆப்படிக்கும் பல விஷயங்களை செய்து வருகிறார் என்பது தினாவின் கணக்கு. அதனால்தான் தனது அடுத்த டார்கெட்டாக தங்கமணியை வைத்திருக்கிறாரம். கூடவே முதல்வர் எடப்பாடியின் நிழலாகவே செயல்படுகிறார் சைலண்ட் தங்கமணி என்பதும் தினாவின் கோபம்.

இதனால்தான் தங்கமணியின் மாவட்டமான நாமக்கல்லில் இருந்து இந்த கொல்லிமலை சந்திரசேகர்  போக இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வையாவது நகர்த்திவிட வேண்டும் என்பதே தினகரன் தனது அணிக்கு போட்டிருக்கும் ஆர்டராம்.

தினாவின் இந்த மூவ்களை கண்டுபிடித்து, தனது மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு காவல் போட்டு காபந்து பண்ணி வருகிறார் அமைச்சர் தங்கமணி. ஆனால் அதையும் தாண்டி அவர்களை கொத்திச் செல்வதில்தான் அண்ணன் தினகரனின் கெத்து இருக்கிறது என்று காலர் உயர்த்துகிறது தினாவின் அணி.

கொல்லிமலை சந்திரசேகரிடம் சில ரவுண்ட்ஸ் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாம். வெகுவான கவனிப்பு என்று சொல்லியும் ஆசை காட்டியுள்ளார்களாம்.
தங்கமணியின் வேலியை சந்திரசேகர் என்றைக்கு தாண்டி குதிக்கிறாரோ! அன்று தினகரன் அணி பட்டாசு வெடிக்கும். ஆனால் அது கூடிய விரைவில் நடக்கும் என்கிறார்கள்