இது டிஜிட்டல் யுகம். அரசியலும் டிஜிட்டலாய் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். லெட்டர் பேடு கட்சிகள் கூட தங்களது ஸ்டேட்மெண்டுகளை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் அகில உலகத்துக்கும் செப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மவர் கமல்ஹாசனும் டீமோ சதா சர்வகாலமும்  சோஷியல் மீடியா மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத்தான் ஆள்பிடிப்பதும், விமர்சனங்களுக்கு ரிவிட் அடிப்பதுமாய் அரசியல் வாழ்க்கையை நகர்த்த துவங்கியுள்ளது.

கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே தங்களுக்கென தனி முகநூல் பக்கம், இணைய தளம், வாட்ஸப் குரூப் ஆகியன வைத்திருக்கின்றன. ஆனால், இவை அனைத்திலும் ஒட்டுமொத்தமாய் ஆதிக்கம் செலுத்துவதோடு, இந்த இணைய வழி வழியாக கட்சிக்கு அதிகமான ஆள் பிடிப்பதுடன், தங்கள் தலைவருக்கு கெத்து சேர்ப்பது யார்? என்று

ஆராய்ந்து பார்ப்போமேயானால்...அந்த பெருமை போய் சேருவது டி.டி.வி. தினகரனின் டீமுக்குதான்.

நெசந்தான் மக்கழே! சோஷியல் மீடியாவை வெச்சு செய்கிறது தினகரனின் இளைஞர் படை. ச்சும்மா சொல்லக்கூடாது தரையிறங்கி தகர அடி அடிக்கிறார்கள். தினகரனின் அன்றாட அரசியல் செயல்பாடுகளை பற்றி தொடர்ந்து போட்டோ, வீடியோ, செய்தி துளிகள் வாயிலாக அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார்கள். இது கூட சாதாரணமான விஷயம்தான்.

ஆனால் முகநூலில் தங்களுக்கென இருக்கும் பக்கங்களில் சதா சர்வ காலமும் சர்வேக்களை நடத்துவது, கேள்விப்பதில்  காலம் வைப்பது என்று விடாமல் வேட்டு வைக்கிறார்கள். இதற்கு வரும் பதில்கள் தினகரனுக்கு சாதகமாய் இருப்பதுதான் ஹைலைட்டே.

உதாரணத்துக்கு ‘தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?’ எனும் கேள்வியுடன் எடப்பாடி, தமிழிசை, தினகரன், ரஜினி, கமல், சீமான், விஜயகாந்த் என்று ஏழு பேரின் பெயர் மற்றும் புகைப்படங்களை போட்டு விடுகிறார்கள். இதற்கு பதில் சொல்லியிருப்பதில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் தினகரனைத்தான் டிக் செய்திருக்கிறார்கள்.

‘இவங்க ஆட்களே இப்படி சர்வேயை நடத்திட்டு, அவங்க ஆட்களே ஓட்டு போட்டா தினகரனுக்கு ஆதரவாகத்தானேய்யா வரும்! இதிலென்ன ஆச்சரியம்?’ என்று சிலர் கேட்கலாம். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை. முகநூலில் அந்த பகுதியை கடந்து செல்லும் யார் யாரெல்லாமோ அந்த சர்வேயில் கலந்து கொள்கிறார்கள்.

காரணம் தினகரனுக்கு கடும் எதிராக சில கமெண்டுகள் அந்த சர்வேயில் கிடக்கின்றன, சிலர் ரஜினிதான் அடுத்த முதல்வர் என்கிறார்கள், சிலரோ கமலை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆக சர்வேயின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஒன்றும் பெரிதாயில்லை.

அதேபோல் வாட்ஸ் அப்  குரூப்பிலும் இப்படியான சர்வேக்களையும், அலசல்களையும் முன்னெடுக்கிறார்கள். இவற்றில் எல்லாமே ஆளும் எடப்பாடி -  பன்னீர் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களும், ரஜினி - கமல் ஆதரவு நிலைப்பாடுகளும், இவர்களையெல்லாம் விட ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், அவரையும் தாண்டி தினகரனுக்கு அமோக வரவேற்பும் இருப்பது உறுதியாக தெரிகிறது.

ஆனால் இந்த நிலை எவ்வளவு நாள் நீடிக்கும்? என்பது புரியவில்லை. தினகரனுக்கு இது தேர்தல் அரசியலில் கைகொடுக்குமா என்பதும் டவுட்டே.

இதில் வருத்தத்துடன் கவனிக்க வேண்டிய விஷயமென்னவென்றால் இந்த சர்வே, அலசல்கள் எல்லாவற்றிலும் சீமானுக்கும் கீழேதான் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.