இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டும் என முதலமைச்சர் கூறியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தவறானது என மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

நாமக்கல் - திருச்சி  நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின் விளக்கு வசதியுடன் புதிதாக  அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவு பெற்றதையடுத்து பொதமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் எம்.பி. சுந்தரம், எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழக மின்சாரம் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மின் விளக்குகளை ஒளிர விட்டு கல்வெட்டைத் திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கமணி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடும் போதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் வைப்பதாக இருந்தால் கையெழுத்திட மாட்டோம் எனத் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா முழுவதுமே விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் வைக்காத நிலையை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார் என்றார். 

இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.  தொகுதிகளிலும் தேர்தல் பணியை தொடங்க தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார் என்று விளக்கமளித்தார். இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.