New year Gift to farmers in telengana

தெலங்கானா மாநில விவசாயிகளுக்கு அரசின் புத்தாண்டு பரிசாக டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது என மாநில மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

வரலாற்று சிறப்பு

டிசம்பர் 31-ஆம் தேதி இரவு முதல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு என 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தெலுங்கானா. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

அரசின் இந்த திட்டத்தின் மூலம் பம்ப் செட் வைத்துள்ள 23 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாநிலம்

தெலங்கானாவில் மின்சக்தி துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் மீறி, நாட்டில் விவசாய துறையில் 24 மணி நேர மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலமாக இருப்பதாக முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறி இருக்கிறார்.

மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தற்போது ஒன்பது மணி நேர மின் விநியோகத்தை பெறுகின்றனர். 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது 24 மணிநேர விநியோகம் வழங்கப்படும் என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.