உடல்நிலை குன்றியுள்ள அன்பழகன் தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி ஸ்டாலினிடம் நீண்ட நாட்களாக கூறி வருகிறார். ஆனால் நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் திமுகவின் பொதுச் செயலாளர் என்று ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் தற்போது அவர் நினைவு தட்டிவிட்டது. மேலும் மிக முக்கிய நிர்வாகப் பணிகளுக்கு பொதுச் செயலாளர் என்ற வகையில் பேராசிரியர் அன்பழகனிடன் கையெழுத்து பெற வேண்டியுள்ளது. ஆனால் நினைவு தட்டியுள்ளதால் அவரால் முன்பு போல் எந்த விவரத்தையும் கேட்க முடியவில்லை. விவரம் அறியாமல் கையெழுத்து வாங்கி பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஸ்டாலினிடம் சிலர் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து அன்பழகனை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அவருக்கு பதிலாக தற்போது பொருளாளராக இருக்கும் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காலியாகும் திமுக பொருளார் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு காலியான பொருளாளர் பதவியை அடைய எவ வேலு மிகவும் முயற்சி செய்தார் முடியவில்லை. இதே போல் பொன்முடியும் கூட பொருளார் பதவி மீது ஒரு கண்ணாக இருந்து வருகிறார். அதே சமயம் திமுக துணைப் பொதுச் செயலாளராக ஐ பெரியசாமிக்கும் கூட அந்த பதவி மீது ஆர்வம் இருப்பதாக சொல்கிறார்கள்.

திமுகவின் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் டி.ஆர்.பாலு தான் தான் அடுத்த பொருளாளர் என்று தற்போதே கூறி வருகிறார். ஆனால் பொருளாளர் பதவியை பொறுத்தவரை ஸ்டாலின் தற்போது வரை இறுதி முடிவெடுக்கவில்லை என்கிறார்கள். இதனால் வேலு, பொன்முடி, பெரியசாமி, டி.ஆர்.பாலு ஆகியோர் அந்த பதவியை பிடிக்க தங்கள் சோர்ஸ்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.