வரும் 10ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது. புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் பெறவே இந்த பொதுக்குழு கூட்டப்படுகிறது. அதன்படி திமுகவில் நீண்ட நாட்களாக கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள ஆ.ராசாவுக்கு புரமோசன் வழங்கப்பட உள்ளது. தற்போது ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் தங்கதமிழ்ச் செல்வன் என மூன்று பேர் கொள்கை பரப்புச் செயலாளர்களாக உள்ளனர்.

திமுகவின் விதிப்படி 2 பேர் மட்டுமே கொள்கை பரப்புச் செயலாளர்களாக இருக்க முடியும். அதன்படி ஒருவருக்கு வேறு ஒரு பதவி கொடுக்க ஸ்டாலின் முடிவெடுத்தார். அந்த வகையில் ஆ.ராசாவை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின் பொருளாளர் ஆவதற்கு முன்பு ஸ்டாலின் திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர். அந்தவகையில் திமுகவில் முக்கிய பதவிகளில் ஒன்றாக துணைப் பொதுச் செயலாளர் பதவி கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆ.ராசாவுக்கு அந்த பதவி வழங்கப்பட உள்ளது.

திமுக தலைவர் கலைஞருடன் மிக நெருக்கமாக இருந்தவர் ஆ.ராசா. அதே நெருக்கத்தை ஸ்டாலினுடனும் ஆ.ராசா தொடர்ந்து வருகிறார். இதற்கு பிரதிபலனாகவே புதிய பதவி என்கிறார்கள்.