கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு அமமுகவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக அமமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவுக்குப் பதில் தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அமமுக தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியாக பதிவு செய்யப்பட்டது. 

அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னர் நேற்று  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையில் டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்தித்தார். நேற்று முன்தினமே பெங்களூரு சென்ற தினகரன்  வழக்கமாக தங்கும் ஹோட்டலில் தங்கிவிட்டு நேற்று நண்பகல் சிறைச் சாலைக்குச் சென்றார்.

தினகரனோடு அமமுகவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாமக்கல் அன்பழகன், ஜெயா டிவி சிஇஓ விவேக், ராஜராஜன், ஷகிலா, வெங்கடேசன்,சசிகலாவின் உதவியாளர் கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள் ஆகியோரும் சென்றிருந்தனர்.

முதலில் சசிகலாவிடம் தினகரன் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து தேர்தல் நிலவரம் குறித்து இருவரும் அரை மணி நேரத்துக்கு மேலாக பேசினர்.

அப்போது விவேக், அமமுகவில் எனக்கு பொறுப்பு ஏதாவது வேண்டும் என்று சசிகலாவிடம் கேட்டிருக்கிறார். அதைக் கேட்டுக்கொண்ட சசிகலா கொஞ்ச நேரம் தினகரனோடு தனியாக பேசியிருக்கிறார். 

பிறகு விவேக்கை அழைத்து, இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இரு. உனக்கு எப்போ என்ன செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும்’ என்று சொல்லியிருக்கிறார். 

அதே நேரத்தில் ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்கும் விதமாக விவேக்கிற்கு அமமுகவில் புதிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.