திமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய பணிகள், சட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமயிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீப காலமாக முன்பு போல் செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அவரது பொறுப்புகளை கவனிக்க திமுகவில் இருக்கும் சீனியர்களில் ஒருவருக்கு அவரது பொறுப்புகளை கவனிக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் தற்போது நாடாளுமன்ற திமுக குழு தலைவராக உள்ள கட்சியின் சீனியர் டி.ஆர்.பாலுவிற்கு இணைப் பொது செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று திமுக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த டி.ஆர்.பாலுவிற்கு அடித்தது யோகம் என்றே சொல்ல வேண்டும்.