தமிழக சட்டப்பேரவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளையும் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்கின்றனர்.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 13  தொகுதிகளிலும் திமுகவும் 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க உள்ளார்கள். இதன்படி  தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்க உள்ளனர். 
சபாநாயகர் அறையில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் நாளை காலை பதவியேற்க இருக்கிறார்கள். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
சபாநாயகர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜி மட்டுமே மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். கடந்த 2016 அக்டோபரில் அதிமுக எம்.எல்.ஏ.வாக செந்தில்பாலாஜிக்கு தனபால் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக தனபால் முன்னிலையில் செந்தில் பாலாஜி பதவியேற்க உள்ளார்.