New formula in election

ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். இது தவிர பாஜக, தேமுதிக கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.

அங்கு தேர்தல் பிரசசாரம் சூடு பிடித்துள்ளது. நேற்று திமுக சார்பில் புது வண்ணாரப்பேட்டையில் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஓபிஎஸ் தனது பரிவாரங்களுடன் தொகுதி முழுக்க சுற்றி,சுற்றி வருகிறார்,

டி.டி.வி.தினகரன் ஒரு புறம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் உள்ளிட்ட குழுவினருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் கொடுக்கும் விஷயத்தில் டிடிவி.தினகரன் அணியினர் புது பார்முலாவை கையாண்டு வருகின்றனர்.

அதாவது வெளியூர் தொண்டர்கள் மூலம் பணம் கொடுத்தால் தெரிந்துவிடும் என்பதால், தொகுதிக்கு உட்பட்ட அந்தந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மூலம் வீடுவீடாக சென்று, வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்,. எத்தனை ஓட்டு உள்ளது என கேட்டு அந்த வீட்டில் உள்ள ஒருவரது போன் நம்பரை ஒரு நோட்டில் எழுதி வருகின்றனர்.

பின்னர் அவர்களிடம் விரைவில் 'உங்களுக்கான பணம் வந்து சேரும்' என்று கூறிவிட்டு செல்கின்றனர்.

தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெரு, கைலாசம் தெரு, மேயர் பாசுதேவ் தெரு, இளையமுதலி தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்பட பல பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை போனில் தொடர்பு கொண்டு தனியாக சந்தித்து பணம் கொடுப்பதோடு தொப்பி சின்னத்தில் வாக்களிப்பதாக அவர்களிடம் சத்தியம் வாங்கிச் செல்கின்றனர். இந்த புது பார்முலா நன்கு ஒர்க்அவுட் ஆவதாக தினகரன் தரப்பு தொண்டர்கள் கூறி வருகின்றனர்.