மன்னார்குடியில் நடைபெற்ற டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது ஆதரவாளர்கள் புதுவித டெக்னிக்கை யூஸ் செய்துள்ளனர். வழக்கமாக டி.டி.வி தினகரன் கூட்டத்திற்கு வரும் கட்சிக்காரர்கள் அல்லாத ஆண்களுக்கு 500 ரூபாயும், ஒரு குவாட்டர் பாட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கு ரூபாய் 300 கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் டி.டி.வி தினகரன் கூட்டத்திற்கு பெண்கள் கூட்டம் அவ்வளவாக வருவதில்லை. இந்த நிலையில் மன்னார்குடியில் தினகரன் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு அதிக அளவில் பெண்கள் வர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஏற்கனவே தினகரன் உத்தரவிட்டிருந்தார். கட்சியில் இருக்கும் பெண்களை கூப்பிட்டு வருவதற்குள்ளாகவே நாக்கு தள்ளிவிடுகிறது. இதில் பொதுமக்களையும் கூட்டி வர வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் யோசனை செய்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த யோசனை தான் குக்கர். பணமாக கொடுத்தால் கூட சிலர் வாங்க கூச்சப்படுவார்கள், ஆனால் இலவச குக்கர் என்றால் நிச்சயம் வந்துவிடுவார்கள் என்று கணக்கு போட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்தது 5 பெண்களை அழைத்து வர வேண்டும் என்றும், ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு டோக்கன் கொடுத்து மன்னார்குடியில் குறிப்பிட்ட சில பாத்திரக்கடைகளுக்கு சென்று குக்கர் பாத்திரங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் மன்னார்குடியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மூடி இருக்கும் பாத்திரக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதுவும் பெண்கள் அதிக அளவில் அங்கு திரண்டிருந்தனர். அருகே சென்று பார்த்த போது தான் அவர்கள் ஒரு டோக்கனை கொடுக்க அதற்கு கடை ஊழியர்கள் பாத்திரங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அதனை படம் எடுக்க முயன்ற போது அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த சில அமமுகவினர் தடுத்து நிறுத்தினர். பாத்திரத்தை வாங்கிய பெண்கள் நேராக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கிச் சென்றனர். அப்போது சில புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படியாக பெண்கள் கூட்டத்தை கூட்டி ஒருவழியாக தினகரன் தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பாக முடித்தார்.