சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அதிமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார். இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் அரசுக்கு தேவைப்படுகிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் இனி கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்தால் இனி அந்த நிகழ்வுகளில் தாம் பங்கேற்க போவதில்லை என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர் செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த சூழலிலும் எந்த காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இனி எந்த காலத்திலும் சாலைகளில் பதாகை வைக்க மாட்டோம் என உறுதி ஏற்கிறோம் என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், பேனர் வைக்க கூடாது என்கிற தனது உத்தரவை பாமகவினர் இன்றும் என்றும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலர் தினகரன், இந்த துயர நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்து கொண்டு, தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பேனர் வைக்க கூடாது என்று அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் சமூக ஊடகங்களில் இது விவாத பொருளாக மாறியிருக்கிறது. பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள்,கொடிகள் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் இருக்கும் நிலையில், அதை எந்த கட்சிகளும் பின்பற்றுவதே இல்லை.

ஏற்கனவே கடந்த ஆண்டு ரகு என்கிற இளைஞர் பேனர் விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக போன பிறகு தொண்டர்களுக்கு உத்தரவிட்டு என்ன பயன் கிடைக்கப்போகிறது. அந்த உயிர் திரும்பி இனி எப்போதும் வரப்போவதில்லையே, என்று தங்கள் ஆதங்கத்தை இணையவாசிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.