தமிழக பாஜகவில் கடந்த 2 வாரத்திற்கு முன், மாநில நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை அறிவித்துள்ளார். 

பாஜக மாநில துணைத்தலைவர்கள், இளைஞரணி, செயற்குழு உறுப்பினர்கள், மகளிரணி ஆகிய அணிகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி உட்பட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி மாநில துணைத்தலைவராக வீரப்பன் மகளான வித்யா வீரப்பன் நியமிக்கப்பட்டார். 

பாஜக மகளிரணி செயலாளராக நெல்லையம்மாள் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்தவர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து அறைந்தவர் நெல்லையம்மாள்.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகவும் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை அய்யாக்கண்ணு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களிடம் வழங்கினார். அதைக்கண்ட, பாஜக பெண் நிர்வாகியான நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவுக்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரத்தை அடக்கமுடியாமல், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்தார் நெல்லையம்மாள். கடந்த 2018 மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அவருக்கு தற்போது பாஜகவில் மகளிரணி செயலாலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.