குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நெல்லை கண்ணனின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட சிலர் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தினர். பாஜக  சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார்  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணத்தால் நேற்று மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் அவர் திருவனந்தபுரம் தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை கண்ணன் சில முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பில  பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். 

இதையடுத்து நெல்லை கண்ணனை அரெஸ்ட் பண்ண முயன்றபோது அவர் வர மறுத்தால் , அவரை போலீசார்   போலீஸ் வேனுக்கு இழுத்து  சென்றனர்.  அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள்  நெல்லை கண்ணணை  சரமாரியாக தாக்கினர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப்பின், கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை கண்ணனை கைது செய்ய போலீசார் வந்த தகவலறிந்து அங்கு வந்த முஸ்லிம் அமைப்பினர் கண்ணனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அங்கு கூடியிருந்த பாஜகவினரும் எதிர்கோஷம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.