மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்,  அதிமுக அம்மா அணி சார்பில், நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி,டி,வி,தினகரன் பங்கேற்கிறார்.

நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வந்த தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், மாணவர்கள், சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் நாளை ,  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன் தமிழக அரசுக்கு எதிராக முதன் முதலில் பொது வெளியில் போராட்டம் நடத்த உள்ளதால் இதனை சிறப்பாக செய்து முடிக்க அவரது ஆதரவாளர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள், மாணவரணியினர் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பாரிமுனையில் இருந்து துறைமுகம் வரை கொடி- தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.