நீட் தேர்வு முறையைக் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்புக்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம், புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனவும் அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவர் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் அனிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், மாணவி அனிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். மேலும், அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளைக் கண்டறிய சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், நீட் தேர்வை ஆதரவு செய்யும் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழகத்தின் இந்து தலைவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

திராவிட கழகங்கள், மே 17 இயக்கம், தலித் அமைப்புகள் உள்ளிட்ட பல இயக்கங்களை தடை செய்ய வேண்டும். திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் நடிகர் கமல், திருமாவளவன், சீமான், கௌதமன், அமீர் ஆகியோரின் தேசவிரோத கருத்துக்களைத் தடை செய்ய வேண்டும். நீட் தேர்வு முறையைக் தமிழகத்தில் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.