ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. நீட் தேர்வு தொடர்பாக பாஜக  என்ன அணுகுமுறையில் இருக்கிறதோ, அதே அணுகுமுறையை ஆளுநரும் கையாண்டிருக்கிறார்.

 நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


நீட் விலக்குக் கோரும் தமிழக அரசின் மசோதா, 5 மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “நீட் விலக்குக் கோரும் மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளதாகவும், மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான பிப்ரவரி 1-ஆம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று ஆளுநர் மாளிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நீட் தேர்வு விலக்குக் கோரும் விவகாரம் பெரிதாகி வரும் நிலையில், இது அதிகார மோதலாக மாறுமா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, அனிதா மரணத்துக்குப் பிறகு, அதை அரசியல் ரீதியாகவும் கையாளத் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் நீட் மரணங்கள் நடந்த வேளையில், அதை அதிமுக - பாஜக அரசுகளுக்கு எதிராக திமுக கொண்டு சென்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று சொன்னது திமுக தேர்தல் அறிக்கை. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தீவிரமாகப் பிரசாரம் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் பாதகங்களை ஆராய திமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அறிக்கை அளித்தப் பிறகு, அதை மையமாக வைத்து, முதல் கூட்டத் தொடரில் நீட் விலக்குக் கோரும் மசோதா செப்டம்பர் 13 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக ஆளுநராகப் பதவியேற்கும் முன்புதான் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு முறை ஆளுநர் ரவியைச் சந்தித்தார். ஆளுநர் தொடர்ந்து மவுனம் காத்ததால், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது திமுக அதிருப்தியில் இருந்து வந்தது. அது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையிலும் வெளிப்பட்டது.

இதற்கிடையே நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆளுநர் இருப்பது, அவருடைய குடியரசுத் தின வாழ்த்து செய்தியில் தெரிய வந்தது. “நீட் தேர்வுக்கு பிறகுதான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் அதிகளவு சேருவதாக” வாழ்த்து செய்தியில் ஆர்.என். ரவி கூறியிருந்தார். இதில் குறிப்பிடப்படும் விஷயம், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்று முந்தைய ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு முரணாக ஆளுநரின் குடியரசு தின செய்தி அமைந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் ‘கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?’ என்ற கட்டுரை திமுக கட்சி பத்திரிகையான முரசொலியில் வெளியாகி, ஆளுநர் ஆர்.என். ரவியை திமுக விமர்சனம் செய்திருந்தது. அதாவது, ஆளுநரின் மூவ்வை அறிந்துதான் திமுக இந்தக் கட்டுரையை வெளியிட்டதாக சொல்லப்பட்டது. இதன் மூலம் ஆளுநருடன் மோதலுக்கு திமுக அரசு தயாராகிவிட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் திமுக எம்.பி.க்கள் தொடர்ந்து நீட் விலக்கு முழக்கங்களை எழுப்பி வந்தனர். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வு குறித்த தமிழ்நாட்டின் கோரிக்கையை சுட்டிக்காட்டி, பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். ‘தமிழக மக்களை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது’ என்று கடுமையாக ராகுல் சாடியிருந்தார். கடந்த ஒரு வாரமாக ஆளுநர் - திமுக அரசு உறவு நீருபூத்த நெருப்பு போல இருந்த நிலையில், மசோதவை சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பி ஷாக் கொடுத்துள்ளார் ஆளுநர். ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. நீட் தேர்வு தொடர்பாக பாஜக என்ன அணுகுமுறையில் இருக்கிறதோ, அதே அணுகுமுறையை ஆளுநரும் கையாண்டிருக்கிறார். இதன்மூலம் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படும் என்ற ஊகங்கள் அதிகரித்துள்ளன. அது, வரும் நாட்களில் வெளியே தெரிந்துவிடும்!