புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார் கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு, வாணக்கண்காடு, கருக்காகுறிச்சி ஆகிய 5 இடங்களில் கடந்த 1996-2006 வரையிலான காலக்கட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்தது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், நெடுவாசல் அருகே உள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. விவசாய நிலத்திலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

நாளடைவில் நெடுவாசல் போராட்டம் வலுத்தது. நெடுவாசல் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவும் அதிகரித்தது. இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, 9 மாதங்களில் நெடுவாசல் கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் மூடப்படும் என எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தார். ஆனால், 9 மாதங்கள் நிறைவடைந்த போதிலும் ஆழ்துளை கிணறுகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதையடுத்து நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் 4ம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அதற்கு முன்னதாக நெடுவாசல் மக்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த விவசாயி, கடந்த ஆண்டு நெடுவாசலில் போராட்டம் நடந்தபோது இளைஞர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் எந்தவித எதிர்பாப்புமின்றி எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போதே கமல் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனினும் பரவாயில்லை. கட்சி ஆரம்பித்தவுடன் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வருகிறார். கமலின் வருகை எங்கள் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

அதேபோல் இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள மற்றொரு விவசாயி, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க கமல் வருவதில் மகிழ்ச்சி. கமலின் வருகை எங்களது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என நம்புகிறோம். கமலின் வருகைக்காக நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.