சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். 

முன்பெல்லாம் கும்பிடுகிற மாதிரி இருக்கிற கே.ஆர்.விஜயா போன்றவர்களைத்தான் சீதை வேடங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் இப்போது கூப்பிடுகிற மாதிரி இருக்கிற நயன்தாரா போன்றவர்களையெல்லாம் கூட சீதை வேடத்தில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்’ என்று ‘கொலையுதிர்காலம்’ பட விழாவில் ராதாரவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் அவர் திமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ராதாரவி. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்து இருந்தார். 

இதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ள நயந்தாரா, ‘’என்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார். பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? கடவுள் கொடுத்த வரத்தால் திரையுலகில் சிறப்பான இடம் கிடைத்துள்ளது. ராதாரவி தொடர்ச்சியாக மேடைகளில் நடிகைகளைப் பற்றி இழிவாக பேசி வருகிறார். அவரை கட்சியை விட்டு நீக்கி கண்டித்ததற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என அவர் தெரிவித்துள்ளார்.