இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கசாலி நகரில் இலக்கியத்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எம்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றார். அப்போது அவர் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாப் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.

இது தொடர்பாக அவர் பேசும்போது, நான் தமிழகத்துக்குச் சென்றால், அங்குள்ள தமிழக மக்கள் பேசும் தமிழ்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அந்த மாநில மக்களின் உணவுப்பழக்கமும் எனக்குப் பிடிக்காது. அவ்வாறு அங்குச் சென்றாலும், அங்குள்ள உணவை என்னால் நீண்ட நாட்களுக்குச் சாப்பிடவும் முடியாது.

தமிழகத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. உணவுப்பழக்கத்தை எடுத்துக்கொண்டால், இட்லி மட்டும் சாப்பிடலாம். ஆனால், தென் இந்திய உணவுகளையும், தமிழக உணவுகளையும் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட முடியும் ? ஆனால் என்னால் அது முடியாது என தெரிவித்தார்.

தமிழக மக்கள் பேசும் வணக்கம் என்ற வார்த்தையைத் தவிர எனக்கு வேறு வார்த்தைகள் புரியாது. அங்கு என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது.

ஆனால், பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாப் மொழி பேசுகிறார்கள், ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களுடன் என்னால் இயல்பாகப் பேசி வாழ முடியும். பஞ்சாபில் இருக்கும் கலாச்சாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது. அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. கலாச்சாரமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். இது மிகவும் வியப்பான விஷயம். இவ்வாறு சித்து பேசினார்.

சித்துவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக , தமிழர்களிடம் ராகுல் காந்தியும், சித்துவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்  என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிரோன்மணி அகாலி தளம் செய்தித்தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா, மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் சித்து வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். யாரையும் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. அதற்கு தடையுமில்லை. அதேசமயம், சொந்த நாட்டையும், சொந்த நாட்டில் உள்ள ஒரு மக்களைத் தரம் குறைந்து பேசக்கூடாது எனக் கண்டித்துள்ளார்.http://c13.zedo.com/OzoDB/0/0/0/blank.gif